மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.
2010-07-21 01:32:24
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இது 5 மடங்கு உயர்வாகும். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்களின் முன்னுரிமைப் பட்டியலில் எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதாவும் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 27 வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், துறைச் செயலர்களுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்று ஆலோசனை நடத்தினார். மொத்தம் உள்ள 795 எம்.பி.க்களுக்கு (மக்களவை 545, மாநிலங்களவை 250) கடைசியாக ஊதிய உயர்வு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்டது. இந்நிலையில், எம்.பி.க்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் எம்.பி. சரண்தாஸ் மஹந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்களின் ஊதியத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களில் வழங்கப்படும் படியை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், அலுவலகப் பயன்பாட்டு நிதி, தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை கணிசமாக உயர்த்தவும் அந்தக் குழு பரிந்துரைத்தது. குழுவின் பரிந்துரையின்பேரில் இப்போது வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மசோதா மழைக் கால கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளது. நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதா முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.