தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
2010-07-22 08:20:25
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். வழக்கமாக, ஜூன் 12ஆம் தேதியன்று, மேட்டூர் அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்காக திறக்க முடியும். கடந்த ஆண்டிலும், ஜூன் 12ஆம் தேதியன்று, 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்ததால் குறிப்பிட்ட அந்நாளில் திறக்க முடியாமல் போனது. இந்த ஆண்டும் அதேபோல், போதிய அளவு நீர் இல்லாததால் மேட்டூர் அணையை திறக்க முடியவில்லை. இதனால், திருவாரூர், தஞ்சை, திருச்சி, நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது 44 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. தற்போது, குடிநீருக்காக மட்டும் தினசரி ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.