கல்வி வளர்ச்சியில் தி.மு.க அரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும், கல்விக்கு செலவிடுவதற்கு இந்த அரசு ஒருபோதும் தயங்காது என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
2010-07-22 08:22:05
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.3.2 கோடி செலவில் கலைஞர் மாளிகை என்ற புதிய கட்டிட திறப்பு விழா இன்று துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துக்கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், உணவு கொடுத்தாவது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்று காமராஜர் தொடங்கிய மதிய உணவு திட்டம் பின்னர் சத்துணவு திட்டமாக மாறியது என்றாலும் ஏழை, எளியவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் தொடங்கிய கல்வி திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறினார். காமராஜரின் சாதனைகளை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரது பிறந்தநாளை கல்விக்கண் திறந்த நாளாக கொண்டாட கல்வி வளர்ச்சி நாள் என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தி வரும் இந்த அரசு, கல்விக்காக செலவிட ஒருபோதும் தயங்காது என்றார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர் பொன்முடி, கல்லூரி முதல்வர் அம்புஜம், உயர்க்கல்வி முதன்மை செயலாளர் கணேசன், கல்லூரி கல்வி இயக்குனர் ஜெயபாஸ்கரன் சார்லஸ், உள்ளீட்டோர் கலந்துக்கொண்டனர்.