சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து வாய்தா வாங்கும் ஜெயலலிதாவை கண்டித்து தி.மு.க.இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு இழுபறி நிலையில் உள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா தன்னை ஒரு ஊழலற்ற உத்தமி என்று சொல்லிக் கொண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கைகள் மூலம் நாடகம் ஆடுகிறார் 1991 – 96 ஆண்டுகாலப்பகுதியில் சுமார் 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு செய்ததாகவும், வழக்குத் தொடரப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது என்று சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்து தமிழ் மக்களை அவமதித்து, நீதிமன்றத்தையும் ஏமாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவின் இந்த காலதாமதத்தை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில், விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாகவும், இந்த திட்டம் விரைவில் தோல்வியடையும் என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஜுலை 23 – ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு வருடத்தைக் கடந்து ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். இதனை பல்வேறு தலைவர்கள் பாராட்டி அறிக்கைகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இயலாதோருக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம்; வேண்டும். அந்த எண்ணம்; இருக்கின்ற காரணத்தால்தான் இவ்வாறான திட்டங்களை அமல்படுத்துகிறோம். இதனை ஊழல் திட்டம் என்றும் கோடி,கோடியாக கொள்ளையடித்து வருகிறார்கள் என்றும் பேசுவோர்களின் கருத்துக்களை ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் உண்மை ஒருநாளும் தோற்றுப் போவதில்லை. அதேபோன்று மக்கள் நலனுக்காக உண்மையுடன் செயல்படுத்தி வரும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு தொடரும் இரயில் விபத்துகள், நக்சலைட்டுகள், மாவோயீஸ்ட்டு தாக்குதல்கள், பாகிஸ்தான் உடனான பேச்சவார்த்தையில் தோல்வி, இந்திய எல்லையில் சீனர்களின் ஊடுருவல், ரெட்டி சகோதரர்களின் தொழில் விதி மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் பிரச்சினைகளை முன் வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகள் கிளப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்று அறிவித்துள்ளது. இன்று கூடும் கூட்டத் தொடரில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், வீரேந்திரபட்டியா, வித்விஜயசிங் ஆகிய உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கள் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்படும். பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டு நாளை மீண்டும் அவை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின் 15 – வது பட்டமளிப்பு விழா சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி பேசினார். அப்போது உலக அளவில் பெண்களின் வளர்;ச்சி அதிக முன்னேற்றம் கண்டுள்ளது. அரசு வேலை வாய்ப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும் உள்ளாட்சி அமைப்புகளை பெண்களுக்கு ஒதுக்கியும் உள்ளது என்று அவர், ஆளுனர் பிரதீபாபாட்டீல், டி.ஜி.பி. லத்திகாசரன் ஆகியேரை உதாரணம் காட்டினார். மேலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற பெயரை பெரியார் என்று வழங்கியவர்களே பெண்கள் தாம் என்றும் உலக அளவில் பெண்களின் வளர்ச்சி கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் உச்சநிலையில் உள்ளது என்றும் பேசினார். விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜோதிமுருகன், கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.